22 November 2009

பிரபாகரன் - வாழ்வும், மரணமும்

இலங்கை, ஈழம், தமிழ் அகதிகள், ராஜிவ் காந்தி படுகொலை, விடுதலை புலிகள், பிரபாகரன் - இவைகளைப்பற்றிய செய்திகளை படிக்காமல், இவைகளைப்பற்றிய ஒரு often changing & ambiguous opinion இல்லாமல், 1990 களில் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் மிக அரிது. அதிலும், 1980-ல் இதைப்பற்றி நிறைய தெரியாமல், 1990 க்களில், குறிப்பாக, ராஜிவ் மறைவுக்குப்பிறகு இதில் ஆர்வம் வந்த என்னைப்போன்றவர்களுக்கு, என்ன தான் துக்ளக்/நக்கீரன்/தராசு/ஜூவி போன்ற பத்திரிக்கைகளை படித்து opinions இருந்தாலும், உண்மையான வரலாறு தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்.  Atleast, எனக்கு நிறைய உள்ளது :)

978-81-8493-150-1_b

அதற்காக, தேடித்தேடி படித்து, PhD வாங்கும் அளவுக்கு ஆர்வம் கிடையாது. Online sources எப்போதெல்லாம் கண்ணில் படுகின்றனவோ, அதையெல்லாம் படிப்பதுண்டு. இதில் ஒரு major grouse என்னவென்றால், totally unbiased opinion யாருமே தருவதில்லை. தமிழ் source ஆக இருந்தால், சிங்களன் கெட்டவன் என்று இருக்கும். Sinhalese source ஆக இருந்தால், தமிழ் தீவிரவாதிகள் விரோதிகள் என்று இருக்கும். இரண்டையும் நம்பக்கூடாது என்று கூடவே இருக்கும் skeptical mind சொல்லும். நேருவின் Glimpses of World History யில் ஓரளவு (பொன்னியின் செல்வன் காலத்து) சிங்கள வரலாறு கிடைக்கும். 4-5 மாதங்கள் முன்பு தினத்தந்தியில் ஒரு தொடர் வந்தது - பழைய காலத்து கதையெல்லாம் (நான் முழுதும் படிக்கவில்லை). இந்த இரண்டு source கள் மூலம் தெரிந்து கொண்டது (or atleast assumed/inferred) - தமிழர்கள் பல காலமாக சிங்களத்தில் இருப்பவர்கள். இப்போதுள்ள சிங்களர், கலிங்க தேசத்திலிருந்து (இப்போதுள்ள ஒரிசா மாநிலம்) சென்றவர்கள். ஆக, இந்த சிங்களர்கள் ஒரு காலத்தில் இந்தியர்கள் (கலிங்கர்கள் ஆரியர்களா / திராவிடர்களா என்று தெரியவில்லை). சோழ ராஜ்ஜியம், மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது மேலும் பல தமிழர்கள் அங்கே சென்றுள்ளனர். இரு ethnics groups க்கும் இடைய animosity அப்போதிருந்தே இருந்திருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள், சென்ற பின் democracy வந்து சிங்களர்கள் majority ஆக இருந்ததால், தமிழர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்தது. Ironically, democracy யினால் பிரச்சனை.

இதற்கு பிறகு நடந்தவை பற்றி விரிவாக, unbiased ஆக எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. (As told before, நான் விரிவாக தேடவுமில்லை). அப்போது, as they say, universe conspired, at least ஹரன் பிரசன்னா did! கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் பல புத்தகங்களை வரிசைபடுத்தி, அவைகளை review செய்வதாக இருந்தால், ஓசியில் தருவதாக எழுதியிருந்தார். அதில், "பிரபாகரன் - வாழ்வும், மரணமும் by பா ராகவன்" இருக்கவே, உடனே அவருக்கு மின்னஞ்சலினேன். இரண்டே நாட்களில் அனுப்பினார். நானும் இரண்டே நாட்களில் (just about an hour and a half each day) முடித்தேன். ஆனால், review எழுததான் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. (இந்த வலைப்பதிவின் frequency of updates பாருங்கள், நான் எவ்வளவு பெரிய சோம்பேறி என்று தெரியும்).

பா. ராகவனின் எழுத்தைப்பற்றி நான் எழுதுவது அபத்தம். மிகத்தெளிவாக, மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். Reading it through was a breeze: 3-4 மணி நேரங்களில் முடிந்தது. அனைத்து விஷயங்களையும் கிரஹித்துக்கொண்டு, இவ்வளவு சீக்கிரம் முடிப்பது கஷ்டம் - அது படிப்பவரைவிட எழுதியவரை பொறுத்தது. அதற்கு ஒரு Hats Off அவருக்கு. இதற்கு மேல் எழுத்தைப்பற்றி ஒன்றும் சொல்லாமல், content என்ன என்று பார்ப்போம். முன்னரையிலேயே disclaimers சொல்லி விடுகிறார் - இது பல sources களிலிருந்து சேகரிக்கப்பட்ட விஷயம் என்று, அதிலும் chronological ஆக எல்லாம் சொல்லப்போவதில்லை என்றும் சொல்லி விடுகிறார்.

பிரபாகரன் என்ற ஒரு complex personality யைப்பற்றி பாரபட்சம் இல்லாமல் எழுதுவது கடினம்தான். இந்த புத்தகமும் முயற்சி செய்கிறது - ஆனால், அதில் வெற்றியடையவில்லை. பல இடங்களில், பிரபாகரனின் எதிரிகள் தரப்பு வாதங்கள் விளக்கப்படவேயில்லை. சிங்களர்களை விட்டுவிடுவோம், மற்ற தமிழர்களின் வாதங்கள் கூட இல்லை - உமா மஹேஸ்வரன், கருணா, மாத்தையா - இவர்களிடம் ஏதேனும் நியாயம் இருக்கலாம், இல்லையா? ஆனால், அது பற்றி நமக்கு இந்த புத்தகத்தில் தெரிய வரவில்லை. கடைசி பக்கங்களில், பிரபாகரன் ஒரு dictator போன்று செயல்பட்டார் என்பது போன்ற வாதங்கள் உள்ளன, but they are too less, too late! By then, நம் மனதில் அவர் பெரிய Hero ஆகி விடுகிறார். :)

புத்தகத்தில் எனக்கு தெரிந்த மற்ற குறை - பல இடங்களில், கதை incomplete ஆக உள்ளது. சம்பவங்களின் கோர்வையாக இருந்தால் கூட, இடையில் பல வருடங்கள் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. Particularly, ராஜிவ் காந்தி சாவுக்குப்பிறகு மிக அரிதான விஷயங்களே கிடைக்கின்றன. அதற்கு முந்தைய காலங்கள் பற்றிய கதையில், சில ஓட்டைகள் இருந்தாலும் (for example, 1972 வில் வீட்டை விட்டு வெளியேறும் பிரபாகரன், 1974 ல் தான் துரையப்பாவை கொல்கிறார், ஆனால் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், அவர் துரையப்பாவை கொன்றுவிட்டு வீட்டுக்கு சென்று படுத்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது),பரவாயில்லை, ஏதோ idea கிடைத்துவிடுகிறது. பிரபாகரனின் MGR மற்றும் ராஜிவுடனான உறவுகள் அருமையாக விளக்கப்பட்டுள்ளன. கருணாநிதி அப்போதிருந்தே Opportunistic ஆகத்தான் இருந்து வருகிறார் பொலிருக்கிறது. அந்த சமயங்களில், போராளிகள் நினைத்தால் இந்தியா வந்துவிடுவதைப்பார்த்தால், பயமாக உள்ளது. நமது/ஸ்ரீலங்கா கடல்படை அவ்வளவு ineffective ஆ என்று!!

இந்த புத்தகம் மூலம், எனக்கு பிரபாகரனை/புலிகளைப்பற்றி பல புதிய விஷயங்கள் தெரிய வந்தன. யாசிர் ஆரஃபத், தலிபன் உடனான அவர்களது தொடர்புகள், அவர்களது கப்பல் கம்பனிகள் பற்றிய விவரங்கள், JN Dixit ன் நாடகங்கள் எல்லாம் எனக்கு completely new!

Getting this book from Haran has been one of the best decisions I have taken in recent times, I should say!

Final Verdict: உங்களுக்கு பிரபாகரனைப்பற்றி detailed, academic ஆய்வு செய்ய வேண்டுமென்றால், இந்தப்புத்தகத்தினால் பயனில்லை. Coffee Table/ Water cooler discussions செய்ய வேண்டிய அளவு ஞானம் இருந்தால் போதும் என்றால், இதுதான் best source. இதில் உள்ள விஷயங்களை வைத்து பல விவாதங்களை (particularly involving non-Tamilians who think Kashmir & Eezham are similar) வென்று விடலாம்.

Go for it.

10 June 2009

... ஆண்ட்ரியா ...

இப்போது: 10 ஜூன் 2009 காலை

கத்திப்பாரா மேம்பாலம். மியாட் மருத்துவமணை செல்ல பூந்தமல்லி சாலையை நோக்கி காரைத்திருப்பினேன்.

“இங்கயா திரும்பணும்?” என் அம்மா.

“ம்..”

“அவனுக்கு தெரியாதாம்மா?” என் தம்பி.

“அது சரி.. எனக்கு என்ன வழி தெரியும்”

“எனக்கே கொழப்பமா இருக்கு, ரெண்டு வருஷம் முன்னாடி வந்தப்போ ப்ரிட்ஜ் கட்டிண்டுன்னா இருந்தான்” என் அப்பா.

“ம்”

“ஏன் டா கம்முன்னு வர்ற, வெங்கீ…” என் அம்மா.

“ஒன்னும் இல்லம்மா…”

“ஹிரண்யா ஒன்னும் பெரிசு இல்லடா… நாம பை பாஸ் எல்லாம் பாத்துட்டோம்…”

நம் குடும்பத்தில் யாருக்காவது சர்ஜரி நடக்கும் போது தான் வியாதிகளைப்பற்றி நாம் முழுமையாக கற்றுக்கொள்கிறோம். என் அப்பாவின் உபயம் - பை பாஸ் பற்றியும், ஹெர்னியா பற்றியும் என் பாட்டி கூட ஒரு விகிபீடியா பக்கம் எழுத முடியும். என்ன, ஹெர்னியாவை ஹிரண்யா என்று எழுதுவாள். அவ்வளவுதான்.

“அப்பா மேல அவ்ளோ பாசம் மா அவனுக்கு…” பெரிய ஜோக் சொன்னது போல சிரித்தான் என் தம்பி. அவனுக்கு எல்லாமே சிரிப்புதான். (கலைஞர் டீவி நிகழ்ச்சி அல்ல)

“பாசமா…!! ராத்திரி தங்கணுமேன்னு கவல படுவானா இருக்கும்… அப்போ கூட நான் தான் காப்பி கலந்து குடுக்கணும்…” அப்பாவும் சேர்ந்து கொண்டார்.

“இல்ல இல்ல… மொபைல் தொலஞ்சதா இருக்கும்… 40 ஆயிரம் போச்சே… இந்த தரம் பத்ரம்பா… இப்போ ஆனா அவ்ளோ காஸ்ட்லி மொபைல் வச்சுக்கலயே…”

“மொபைலா முக்கியம்… தலைல அடி பட்டது பத்தி கவல படக்காணும்…”

அவர்கள் சொல்வது உண்மைதான் - பழய ஞாபகம் தான். ஆனால் அவர்களுக்கு தெரியாத வேறு ஞாபகங்கள் – ஆண்ட்ரியாவைப்பற்றி.

மியாட் மருத்துவமணையின் பல ரெட்-டேப்களைத்தாண்டி அப்பாவை ரூமில் அமர்த்தினோம். ஒருவர்தான் உடன் இருக்கலாம் என்பதால் நானும் தம்பியும் வெளியே வந்து விட்டோம். தம்பியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ரிஸப்ஷனில் போய் ஆண்டனியைப்பற்றியும் ஆண்ட்ரியாவைப்பற்றியும் விசாரித்தேன். பைத்தியக்காரத்தனம் தான். என்ன செய்ய. எதிர்பார்த்தது போலவே அவர்களைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆனந்த விகடன் வாங்கிக்கொண்டு கார் பார்க்கிங்கில் போய் உட்கார்ந்தேன். ஆனால் படிக்க முடியவில்லை. பழைய ஞாபகங்கள்.

ஆண்ட்ரியாவின் ஞாபகங்கள்.

அப்போது: 21-22-23 ஜூன் 2007

பை பாஸ் சர்ஜரி முடிந்து, இரண்டு நாட்கள் ICU வில் வைத்துவிட்டு அப்பாவை அன்றுதான் ரூமுக்கு அழைத்து வந்தார்கள். அம்மாவும் நானும் இருந்தோம். ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் ஒரு Physiotherapist வந்தார்கள். Physio அழகாக இருந்தாள். அம்மாவிடம் டாக்டர் விளக்கங்கள் கொடுக்க என்னிடம் இவள் அப்பா செய்ய வேண்டிய பயிற்சிகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாள். நீங்கள் கவலைப்பட வேண்டாம், நானே தினமும் இரவு வந்து அவரை exercise செய்ய வைக்கிறேன் என்றாள். (அது ஏன் இரவில் என்று தெரியவில்லை). அவள் அழகில் லயித்திருந்தேன் நான் – செமையான மல்லு குட்டி, என்று என்னுள் இருந்த மிருகம் சொல்லியது. மருத்துவமணைகளில் நர்ஸ்கள் தான் sisters, Physio வை எல்லாம் சைட் அடிக்கலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

அன்று இரவே எனக்கு அங்கே தங்கி அவள் exercise சொல்லிக்கொடுக்க வரும்போது பார்த்து பேச வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அன்று அம்மா தான் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை – After all, அப்பாவை கவனிப்பதுதான் முக்கியம் என்று வீட்டுக்கு போய்விட்டேன். (நெஜமா பாஸ்)

அடுத்த நாள் இரவு என் தம்பி தான் இருப்பதாக சொல்ல, உனக்கு வயசு பத்தாது என்று சொல்லி விரட்டி விட்டு, நானே இருந்தேன். மருத்துவமணையில் இரவு தங்குவதற்கு நீட்டாக ஷேவ் செய்து மேக்கப் எல்லாம் போட்ட முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்.

அவள் வந்தாள். சிரித்தாள். சொக்கிப்போனேன். அவளுடன் சேர்ந்து அப்பாவை நானும் அதட்டினேன்.

நானும் எவ்வளவோ  பெண்களிடம் வழிந்து வழிந்து பேசியிருக்கிறேன் – கல்லூரியில் எனக்கு ‘ஜொள்ளு பார்டி’, ‘கடலை மன்னன்’ என்றெல்லாம் தான் பெயர் (பொறாமைக்காரர்கள் வைத்தது). ஆனால், எந்தப்பெண்ணுடம் பேசியே ஆக வேண்டும் என்று desperate ஆக இருந்ததில்லை. ஒரு ஃபிகர் இல்லையென்றால் இன்னொன்று என்று தான் நினைப்பேன். ஆனால், இவளை பார்க்கும் போது மட்டும் ஏனோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு வருகிறது. வயதாகி விட்டதோ என்று பயந்தேன்.

Exercise முடித்து அவள் செல்லும் முன், “இங்கே biscuits ஏதாவது கிடைக்குமா” என்றேன்.

“கீழே Pharmacy ல கேளுங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த ரூமுக்குள் சென்று விட்டாள்.

Pharmacy யில் கிடைக்கும் என்பது எனக்குத்தெரியாதா. அப்படியே அவளுடன் பேசிக்கொண்டே கீழே போகலாம் என்றால் – அது தெரியாமல் அடுத்த ரூமுக்குள் போகிறாள்.

அப்பா தூங்கியவுடன் வெளியே அந்த ப்ளாக்கின் லாபிக்கு வந்தேன் – ஏதாவது வேண்டுமென்றால் அப்பா மணி அடிப்பார். ‘Black Swan’ ஐ வைத்துக்கொண்டு அங்கிருந்த ஸோஃபாவில் உட்கார்ந்தேன். ஒன்றும் படிக்க பிடிக்கவில்லை. அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தேன்.

“உள்ள தூங்க முடியலயா?”

அவள் தான். வெள்ளை உடையில் தேவதை.

“இல்ல… அதெல்லாம் ஒன்னும் இல்ல… தூக்கம் வரல…”

“ஓ… அப்போ எனக்கு கம்பனி கெடச்சது….” என்று சிரித்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

“Oh my pleasure..” என்று அசடு வழிந்தென். அதற்கெல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்.

ஓரிரு கணங்கள் ஒன்றுமே பேசவில்லை. பல பேருக்கு கடலை போட கத்துக்கொடுத்திருக்கிறேன் – முதலில் இப்படி பேசு, அப்படி தலை ஆட்டு என்றெல்லாம் சொல்லுவேன். ஆனால் இவள் முன்னால் பேச முடியவில்லை. உதடெல்லாம் உலர்ந்து போனது போல் இருந்தது. கடைசியில் மொக்கையாக

“Regular ஆ Night Shift ஆ?” என்றேன்.

“ஆமா…” என்று புன்னகைத்தாள்.

“வீடு பக்கத்துலயேவா?”

“இல்ல கேகே நகர்…”

“ஓ… Commute எல்லாம் கஷ்டமா இல்லையா?”

“இல்ல… எங்க அண்ணன் இங்க Admin Department ல இருக்கான்… அவனுக்கும் Regular ஆ Night Shift… So சேர்ந்தே வந்துட்டு போய்டுவோம்…”

“…”

அண்ணனா… வில்லன்… பக்கத்திலேயே இருக்கிறானா!

“நீங்க reception ல பாத்திருக்கலாம்… ஆண்டனின்னு….”

“ஓ…”

அவனா… மாடு மாதிரி இருந்தானே.

“நீங்க? சாஃப்ட்வேரா? பாங்களூரா?”

“…”

அது என்ன. நீளமான முடியுடன் ஃப்ரென்ச் பியர்ட் வைத்தால் ‘சாஃப்ட்வேர், பெங்களூரா?’

“தப்பா? சும்மா guess பண்ணினேன்”

“சரி… ஆனா தப்பு… பெங்களூர் சரி, சாஃப்ட்வேர் தப்பு… I am on my own, Digital Marketing Consultant ஆ இருக்கேன்.”

“ஓ…”

சத்தியமாக “Digital Marketing Consulting” என்று சொன்னது புரிந்திருக்காது. வழக்கமாக சொல்லும் விளக்கத்தை சொன்னேன்.

“அது… இந்த Websites ல…”

“தெரியும்… Digital Marketing ன்னா என்னன்னு தெரியும்… Social Media Marketing லயும் Expert ஆ?'”

அடிப்பாவி. இதெல்லாம் தெரிகிறதே. நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.

“ஆமா… அதுவும் உண்டு… என்னோட clients க்கே புரியறதில்லை இதெல்லாம்… I am amazed…”.

அட்றா அட்றா. அண்ணன் ஃபார்முக்கு வர்ற மாதிரி இருக்கு.

ரொம்பவே வெட்கப்பட்டாள்.

“இல்ல… அது… என் friend ஒரு Digital Agency ல வேல பாக்கறா… அதான்…”

“Still… கலக்கிட்டீங்க… ஆ… By the way, உங்க பேரு?”

“ஆண்ட்ரியா…”

“வாவ்…. வித்தியாசமான பேர்…”

“தேங்க்ஸ்…” என்னவொரு புன்னகை. இப்படி ஒரு அழகியை முழுக்கை அணிந்த உடையிலா பார்க்க வேண்டும். ஹ்ம்.

“என் பேரு கேக்க மாட்டீங்களா? வெங்கீ…”

“எனக்கு தெரியுமே… அப்பா கூப்பிட்டாங்களே….”

“ஓ…. Smart….”

மறுபடி புன்னகை. எப்ப்புடீ…!

“இங்கே எங்க தங்கியிருக்கீங்க?”

“என் கஸின் வீட்ல, கோபாலபுரத்துல…”

அப்புறம் என்ன!. பேசினோம், பேசினோம்… பேசிக்கொண்டேயிருந்தோம், இரவு முழுவதும். அவ்வப்போது நான் போய் அப்பா சரியாக தூங்குகிராறா என்றும், அவள் போய் யாராவது casualty யில் இருக்கிறர்களா என்று பார்த்த நேரம் தவிர – ஒரே கடலை தான். Vindaloo restaurant போய் ஒரு காப்பி வேறு.

பல கடலைகளை வறுத்தவனாயினும், இது வித்தியாசமானதாகத்தான் இருந்தது. இவ்வளவு Smart ஆன பெண்ணை நான் பார்த்ததில்லை. Issac Asimov பற்றி, Singularity பற்றி, மருதநாயகம் பற்றி, Roshomon பற்றி என்று எனக்கும் தெரியாத பல விஷயங்களை பேசினாள். BE-MBA வகையறாவைத்தவிர மற்றவர்களுக்கு அவ்வளவு ‘போதாது’ என்ற என் கருத்தை தவிடு பொடியாக்கினாள்.

முதல் நாள் வெறும் ஈர்ப்பாக இருந்தது, பின்னர் பேச வேண்டும் என்ற ஆர்வமாக மாறியது, இப்போது அதையெல்லாம் தாண்டி வேறு ஒரு கட்டத்திற்கு செல்வது போல் இருந்தது. வெறும் 5 மணி நேரப்பேச்சு தான். ஆனால், இப்போதும் பல Arrange திருமணங்களில், ஒரு 1 மணி நேரம் மட்டும் பேசிதானே முடிவெடுக்கிறார்கள்?

விடிகாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலை வந்து விட்டது. நான் ரூமுக்கு சென்று படுத்துக்கொண்டேன். ஆறு மணிக்கு காப்பி வந்தது. அப்பா தான் கலந்து விட்டு என்னை எழுப்பினார். நான் இரவு முழுதும் குரட்டை விட்டதாகம் தன்னால் தூங்கவே முடியவில்லை என்றும் சொன்னார்.

7 மணிக்கு தம்பி வந்தான் என்னை விடுவிக்க. நான் கிளம்பினேன். பயங்கரமாக மழை பெய்தது. பார்க்கிங்கிலிருந்து காரை எடுக்க போன போது ஆண்டனியும் ஆண்ட்ரியாவும் பைக்கை வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். மழையினால் எனக்கு நன்மை.

ஆண்டனி என்னைப்பார்த்து புன்னகைத்தான்.

“சர்ஜரி ஆச்சா சார்?”

“ஆச்சு பாஸ்… நீங்க insurance எல்லாம் clear பண்ணிட்டா 2 நாள்ல கிளம்பலாம்னு டாக்டர் சொன்னாரு”

“ஆயிடும் சார்… Don’t Worry பண்ணாதீங்க”

தங்கை அந்த போடு போடுகிறாள். அண்ணன் மொக்கையாக ‘Don’t worry பண்ணாதீங்க’ என்கிறான்.

என்னை தெரியாதது போலவே நின்றிருந்தாள் அவள். பெண்களை நம்பவேகூடாது.

“இது என் sister சார், இங்கேயே physio வா இருக்கா”

“ஹலோ… பாத்தேன் நேத்தி.. அப்பாவுக்கு exercise சொல்லி குடுக்க வந்தாங்க” எனக்கும் இரவு முழுதும் போட்ட கடலையை பற்றி சொல்ல இஷ்டமில்லை.

“ஹலோ” என்றாள் அவளும் ஏதோ மூன்றாவது மனிதனிடம் பேசுவது போல.

“ஆண்டனி, நான் வேணா உங்கள drop பண்றனே…”

“ஹ்ம்ம்… வேணாம் சார்…. அப்பறம் பைக் இங்கயே தங்கிடும், சாயங்காலம் பஸ் புடிக்கனும்…”

“…”

“எங்க போறீங்க நீங்க?”

“கேகே நகர்…” என்றேன் வாய் கூசாமல்.

“ஆண்ட்றியா, நீ வேணா போறியா சார் கூட? இந்த ஒரு வாரம் சளி கிளி புடிக்காம பாத்துக்கோமா…”

அவள் முகம் சுருங்கியது. ரொம்ப யோசித்தாள். டூ மச். ராத்திரி முழுதும் அப்படி பேசினாளே, இப்போது என்னவோ இப்படி முகம் சுருக்கிகிறாள். நான் கிளம்பினேன். நான் காரை கொண்டு வருவதற்குள் அவன் அவளை சம்மதிக்க வைத்தான். என் அருகில் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

“ஏன் கேகே நகர் போறதா சொன்னீங்க?”

“நீ ஏன் என்னைத்தெரியாத மாதிரியே நடிச்ச?”

இருவரும் சிரித்தோம். நீங்க என்பது நீ ஆனதை நீங்கள் கவனித்திருக்கலாம். என்னவோ பல நாட்கள் பழகிய ஒரு நண்பியுடன் பேசுவதைப்போல இருந்தது. அவள் வீட்டின் முன் காரை நிறுத்தினேன். இறங்கிக்கொண்டாள். என்னைப்பார்த்து வசீகரமான ஒரு புன்னகை செய்து,

“Thanks” என்றாள்.

“…”

“Bye…”

“ஆண்ட்ரியா…”

“….”

“நீ ரொம்ப அழகா இருக்க…”

முகம் சுருங்கியது. உடனே சுதாரித்துக்கொண்டு சிரித்தாள். காரைச்சுற்றிக்கொண்டு என் அருகே வந்தாள்.

“வெங்கீ…”

“….”

“Thanks a lot… நான் ஒன்னு சொல்லனும் உங்க கிட்ட… நேத்தியே சொல்லியிருக்கணும், ஆனா வேற பேச்சு ஸ்வாரஸ்யத்துல இத சொல்லல ”

“…”

“I am engaged… இன்னிக்கு ராத்திரி தான் எனக்கு கடைசி Duty…. Next week, கேரளாவுல எனக்கு கல்யாணம்…”

அந்த ஆண்டனி அதனால் தான் ஒரு வாரம் சளி பிடிக்கக்கூடாது என்றானா?

“…”

“ஹலோ… கேக்கறீங்களா?”

“ஓ…. yes yes… Congratulations…”

“Thank you…”

“யாரு அந்த lucky guy?”

“தாமஸ்… என் அண்ணனோட ஃப்ரெண்ட்… துபாய்ல இருக்காரு… ஒரு ஆஸ்திரேலியன் கம்பனில logistics manager ஆ இருக்காரு…”

தெரியும் எனக்கு. இந்த அண்ணன் தான் உலை வைப்பான் என்று.

“ஓ… that is great…”

தலையை குனிந்து கொண்டு புன்னகைத்தாள்.

“சரி நான் கிளம்பறேன்…”

“Bye”.

என்னை விட்டு போய்விட்டாள். Literally!! ஒரே இரவில் வாழ்க்கை ஒரு முழு வட்டம் அடித்துவிட்டது போல இருந்தது.

இப்போது: 10 ஜூன் 2009 மாலை, 11 ஜூன்.

“என்னடா தூங்கறயா?”

ஆண்ட்ரியாவின் நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு, இப்போது 2009 ல் ஹெர்னியா சர்ஜரிக்காக வந்திருக்கிறோம் என்பதேலாம் பிடிபடவே கொஞ்ச நேரம் ஆனது. சாயங்காலம் ஆகியிருந்தது. தம்பி திரும்பியே வந்துவிட்டான்.

“டேய்… Are you OK? சாப்டியா?”

“சாப்ட்டேன் டா…”

“சரி நீ அம்மாவ கூட்டிண்டு சீக்கரம் வீட்டுக்கு போய் தூங்கிடு… நான் தங்கறேன் ராத்திரி…”

“சரி..”

“அப்பாடா… இப்போவும் வயசு பத்தாதுன்னு சொல்லிடுவயோன்னு பயந்தேன்…” என்று சிரித்தான்

அம்மாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போன போது, ஆண்ட்ரியாவும் ஆண்டனியும் ஆட்டோவிலிருந்து இறங்கி மியாட்டுக்குள் செல்வது போலிருந்தது. பிரமை என்று நினைத்துக்கொண்டேன். என் மேலேயே எனக்கு ரொம்ப கோபம் வந்தது. அப்போது அவ்வளவு கோழையாக இருந்திருக்கக்கூடாது. ஒரு சிறு உதவிதானே கேட்டாள் அவள் – யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான் சொன்னாள். மொபைல் தொலையாமல் இருந்திருந்தால்?

நாளை காலை சர்ஜரி, மாலையே டிஸ்சார்ஜ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள் அம்மா. ‘ம்’ மட்டும் சொல்லிக்கொண்டு வந்தேன்.

“உனக்கு என்னமோ ஆயிடுத்து…” என்ற போது கூட ஒன்றும் சொல்லவில்லை நான்.

அன்று இரவு நன்றாக தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை அப்பாவை சர்ஜரிக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். தம்பியும் வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு திரும்ப வந்துவிடுவதாக சொன்னான். அம்மாவும் போய் முதல் நாளைப்போலவே ரூமிலும் கார் பார்க்கிங்கிலும் உட்கார்ந்து கொண்டோம்.

மறுபடி பழைய ஞாபகங்கள்.

அப்போது: 23-24 ஜூன் 2007

அவள் ‘I am engaged’ என்று சொல்லிவிட்டு போன பிறகு நொந்து போனேன். நாள் முழுதும் தூக்கம் வர வில்லை. அம்மாவும் தம்பியும் அன்று பகல் முழுதும் இருந்ததால், அன்றிரவும் நானே இருக்க வேண்டியுருந்தது. நான் குறட்டை விடுவதாக சொன்னாலும் அப்பாவுக்கும் தம்பியை விட நான் இருந்தால் கொஞ்சம் நிம்மதி.

இரவு பத்து மணிக்கு வந்தாள். எனக்கு அவள் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை. வெறுமே புன்னகைத்தேன். ஏனோ ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். அப்பாவும் exercises சீக்கிரமே செய்து முடித்தார். அவளும் போய்விட்டாள்.

அப்பாவும் தூங்கிய பிறகு நானும் தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. வெளியே வந்தேன். அதே சோஃபாவில் அவள் உட்கார்ந்திருந்தாள்.

“வாங்க… காணுமே, தூங்கிட்டீங்களோன்னு நெனச்சேன்…”

அரை-புன்னகை சிந்தினேன். நெனப்பீங்க டீ… ராத்திரி பொழுது போகலன்னா நாங்க வேணுமா கடல போட… அப்புறம் காத்தால ஆனதும் துபாய் போறேன்… ஆப்பரிக்கா போறேன்னு ஆப்படிக்கறதுக்கா.

“வாங்க உட்காருங்க”

வேண்டா வெறுப்பாக உட்கார்ந்தேன். ஆனால் என் வெறுப்பை அவளிடம் காட்ட விரும்பவில்லை. அவள் ஒன்றும் என்னை ஏமாற்றவில்லையே, நானேதான் நிறைய கற்பனை செய்து விட்டேன். இன்று பேசவில்லையென்றால், Cheap ஆக நினைப்பாள்.

பல வழக்கமான Arm-Chair அரசியல் பேச்சுக்களுக்கு பிறகு அவள் தன் குடும்பத்தைப்பற்றி சொன்னாள்.

அப்பா பல வருடங்களுக்கு முன்னலேயேயே போய்விட்டாராம். குடித்துவிட்டு ஸ்கூட்டர் ஓட்டி லாரியில் அடி பட்டு இறந்து விட்டாராம். நரம்பியல் நோயால் அம்மா பாதிக்கப்பட்டுள்ளாராம். அண்ணண்தான் படிக்கவைத்ததாம். மொத்த குடிம்ப பாரத்தையும் 17 வயதிலிருந்து சுமக்கிறானாம். ஒரு சின்ன ஆங்கில பிழைக்காக அவனைப்போய் மட்டமாக நினைத்தோமே என்று வருத்தப்பட்டேன். பல நாட்கள் பல கம்பனிகளில் பல விதமான வேலைகள் செய்துவிட்டு இப்போதுதான் கொஞ்ச நாட்களாக பணக்கஷ்டம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுகிறானாம்.

துபாயில் இருக்கும் தாமஸ் தான் நிறைய உதவிகள் செய்கிறானாம். இப்போது கூட ஆண்டனி தனியாக தொழில் தொடங்க உதவுவதாக சொல்லியிருக்கிறானாம். அவனுக்காக ஆண்டனி உயிரைக்கூட கொடுப்பார்களாம். அடடா, இப்படி ஒரு நட்புக்கதையை கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகின்றன என்று நினைத்துக்கொண்டேன். தப்பாக நினைக்க வேண்டாம். எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு, ஆனால் இப்படி உயிரைக்கொடுக்கிறேன் என்பதெல்லாம் டூ மச்சாகத்தான் நினைத்திருக்கிறேன். அதெல்லாம் சினிமாவில் தான் சரி வரும் என்பது என் கணிப்பு.

முதல் நாள் பேசும்போது நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் அன்றிரவு ரொம்ப மெதுவாக போனது. அவ்வப்போது கொட்டாவி விட்டேன், மணி பார்த்துக்கொண்டேன். அவளோ விடுவதாக இல்லை – ஏதோ பேசிக்கொண்டேயிருந்தாள். காப்பி வாங்கித்தந்தாள். அவள் ஏதோ சொல்ல வருவது போலவும் ஆனால் சொல்ல முடியாமல் தவிப்பது போலவும் இருந்தது.

சிறிது நேரம் எதுவும் பேசவேயில்லை. நான் அப்படியே லேசாக கண் அயர்ந்தேன். சட்டென்று

“வெங்கீ” என்றாள்.

மணி ஐந்து ஆகியிருந்தது.

“சாரி… அப்டியே கண்ணு இழுத்துடிச்சி…”

“பரவயில்லை… ஒன்னு கேக்கலாமா?”

“…??”

“உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா?”

“??… என்னது??”

“சொல்லுங்க வெங்கீ… புடிச்சிருக்கா?”

“அது… புடிச்சிருக்கு… ஆனா…. நீ நெனக்கற மாதி்ரி….”

“என்ன நீங்க புரிஞ்சிக்கவே இல்லையா…. நேத்தி ராத்திரி முழுக்க நான் சொல்ல வந்தத நீங்க புரிஞ்சிக்கவேயில்ல…”

“இல்ல…. அது…, புரிஞ்சது… இப்போதான் கொஞ்சம் தூங்கிட்டேன்… verbatim ஆ இல்லாட்டா கூட I think I can repeat whatever you said…” என்று சிரித்தேன்.

ஆனால் அவள் அழத்தொடங்கியிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அழுகிறாள். நான் ரொம்ப aloof ஆக இருந்துவிட்டேனா.

“ஆண்ட்ரியா… என்ன ஆச்சு…. I am so sorry….”

“வெங்கீ… எனக்கு இந்த கல்யாணம்… தாமஸ புடிக்கல…”

“….”

“அவன் இங்க இருக்கும்போதே நெறைய பொண்ணூங்களோட சுத்தினான்… அங்க போய் என்னல்லாம் பண்றானோ…”

“ஆண்டனி கிட்ட சொன்னியா?”

“சொன்னேன்… அவன் சொல்றான், தாமஸ் இப்போ திருந்திட்டானாம்… கொஞ்சம் adjust பண்ணிக்கோ அப்டீங்கறான்”

“…”

“எனக்கு தெரியும், அவன் திருந்த மாட்டான்… அவன பொருத்த வரைக்கும் பொண்ணுங்கறவ ஒரு commodity மாதிரி… அவன் ஒரு chauvinistic dog… அங்க போனா நான் ஒரு அடிமையாத்தான் இருக்கனும்…”

“கமான் ஆண்ட்ரியா… நீ ரொம்ப யோசிக்கற… அவன் நெஜமா திருந்திட்டானோ என்னமோ…. Every male is chauvinistic sometime or the other…”

“இல்ல வெங்கீ… உங்களுக்கு தெரியாது… அவன் எங்க அண்ணனுக்கு காசு குடுக்கறதே எனக்காகத்தான்… I am being bought…” என்று விசும்பி விசும்பி அழுதாள்.

“இல்ல… நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க… அப்படி இருந்தா உங்க அண்ணன் சும்மா இருப்பானா?”

“ஆண்டனி நல்லவன் தான்… ஆனா, தாமஸ் கிட்ட எப்படி பேசறதுன்னு பயம்…”

“பேசாம நீ வேற யாரையாவது லவ் பண்றன்னு சொல்லிடறது தானே…”

“அதான் இன்னிக்கு காலைல யோசிச்சோம்… ஆனா, யாரைன்னு தாமஸ் கேட்டுட்டா என்ன சொல்றதுன்னு தெரியல… அதான் ஆண்டனி பயப்படுறான்”

“…”

“அதான் உங்கள கேட்டேன்… என்ன பிடிச்சிருக்கான்னு…”

“What??” சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை. ஒரு வித மிரட்சியிலிருந்தேன்.

“தப்பா நெனைக்காதீங்க வெங்கீ… நான் இப்போ சந்தர்ப்பவாதியா பேசறேன்னு நீங்க நெனைக்கலாம்… ஆனா, நெஜமா.. நெஜமா உங்கள மாதிரி ஒரு ஆளை நான் முன்னாடியே மீட் பண்ணியிருந்தா நான் கண்டிப்பா லவ் பண்ணியிருப்பேன்…”

“…..”

“நீங்க என்ன லவ் பண்ணனும்னு சொல்லல… We seem to have so many things in common… இல்லன்னா நேரம் போனதே தெரியாம நேத்து ராத்திரி பேசியிருக்க முடியாது… சத்தியமா சொல்றேன்… I have never had a wonderful discussion like that before… இதுக்கு அப்புறமும் வருமான்னு தெரியல…” மறுபடி குரல் உடையத்துவங்கியிருந்தது.

“…”

“ஒன்னும் சொல்ல மாட்டீங்களா வெங்கீ…”

“என்ன சொல்றதுன்னே தெரியல… இப்போ அப்பா இங்க இருக்காரு…”

“புரியுது வெங்கீ… நீங்க உடனே முடிவு பண்ண வேண்டாம்… நான் ஆண்டனி கிட்ட ஏற்கனவே பேசிட்டேன்… இப்போதைக்கு, ஒரே ஒரு வாட்டி நீங்க….”

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

“அப்பா கூப்படறாரு… நான் இதோ வந்துடறேன்…”

அப்பா மூச்சு விட முடியவில்லை என்றார். உடனே ந்ர்ஸுக்கு சொல்லி விட்டு, டாக்டர் சொன்னது போல அப்பாவை உட்கார வைத்தேன். டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் பயப்பட வேண்டாம், திரும்ப முடியாமல் படுத்திருப்பதால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள். அவர்கள் சிறிது மூச்சு பயிற்சி செய்ய சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆண்ட்ரியா என்னை சைகை பாஷையிலேயே அழைத்து 10 மணிக்கு ஃபோன் செய்ய சொன்னாள். நான் அவளை வெயிட் செய்யச்சொன்னேன். டாக்டர்கள் எல்லாம் போன பின், வெளியே வந்து அவளைத்தேடினேன். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. பார்க்கிங்கில் பார்த்தேன், அங்கே ஆண்டனியின் பைக்கும் இல்லை. நான் திரும்ப ரூமுக்கு வந்தேன் – அப்பா காப்பி கலந்து கொண்டிருந்தார்.

இப்போது: 11 ஜூன்.

“என்னடா.. மறுபடி சிந்தனை செய் மனமேன்னு ஒக்காந்துட்டியா?” தம்பி வந்துவிட்டான்.

“…”

“நீ ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டியா? அம்மா 10 தரம் பண்ணியிருக்கா…”

“ஓ…” ஆமாம், பல மிஸ்டு கால்கள்.

“ஆபரேஷன் ஆச்சாம்… ஒன்னும் ப்ரச்சன இல்லையாம்…. இன்னும் கொஞ்ச நேரத்துலயே ரூமுக்கு வந்துடுவாளாம்… சாயங்காலம் கிளம்ப வேண்டியது தான்..”

“குட் குட்… Insurance எல்லாம் ஆச்சா?”

“உன்ன தான டா பாக்க சொன்னேன்… பாக்கலயா? காத்தால்லேந்து என்ன பண்ற?”

“ஓ… சாரி டா… நீ பாக்கறன்னு மறந்துட்டேன்… இதோ பாத்துட்டு வந்துடறேன்…”

“சரி.. கால் பண்ணு… நான் அப்டியே ஏமாத்திட்டு உள்ள போக முடியுதான்னு பாக்கறன்… நான் ஃபோன் பண்ணா கொஞ்சம் எடு அத”

Insurance காரனிடம் பெரிய க்யூ. இப்போது யாருமே கை காசை போட்டு மருத்துவம் செய்பதில்லை போலிருக்கிறது. அதுவும் இங்கே வருபவர்கள் கண்டிப்பாக insurance இல்லாமல் வர முடியாது. தமிழ்நாடு அரசும் இப்போது எல்லா அரசு ஊழியர்களுக்கும் insurance வசதி கொடுப்பதால், வழக்கத்தை விட கூட்டம் அதிகம்.

க்யூவில் நிற்கும்போது பார்த்தேன். தூரத்தில் ஆண்ட்ரியா, ஆண்டனி போல இருவர் நின்றிருந்தனர். இது பிரமை போல தெரியவில்லை. இந்த வேலை முடிந்தவுடன் கிட்டத்தில் போய் பார்த்து விட வேண்டியது தான். ஆனால் அதற்குள் அவர்கள் ஏதோ ஒரு அறையினுள் சென்று விட்டனர்.

அந்த மொபைல் திருடன் மட்டும் கையில் கிடைத்தானென்றால், கொலையே செய்து விடுவேன் இப்போது. எவ்வளவு கஷ்டங்கள் அதற்கு பிறகு. மறுபடி அந்த நாள் ஞாபகத்திற்கு வந்தது.

அப்போது: 24 ஜூன் 2007 உம் அதற்குப்பிறகும்

அவள் பாட்டுக்கு சைகையிலேயே ஃபோன் செய் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் என்ன எதிர்பார்க்கிறாள்? எனக்கு அவளை பிடித்திருக்கிறது தான். ஆனால், இன்றேவா கல்யாணம் செய்ய முடியும்? நான் போய் ஆண்டனியிடம் பேச வேண்டுமா? இல்லை தாமஸிடமேவே? தாமஸ் தாவாங்கட்டையிலேயே ஒன்று விட்டால் என்ன ஆவேன்? இது போன்ற சமயங்களில், கார்த்திக்கிடம் பேசி விடுவது நல்லது. என் நண்பன். உயிரையெல்லாம் கொடுக்க மாட்டான். ஆனால், நல்ல அட்வைஸ் கொடுப்பான்.

வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு அவனுக்கு ஃபோன் செய்ய வெளியே ஓடினேன். வீட்டுக்குள்ளா, அதுவும் பெரியம்மா வீட்டுக்குள்ளா இதெல்லாம் பேச முடியும்? முதலில் அவனிடம் பேசிவிட்டு அப்புறம் அவளிடம் பேசலாம்.

கடந்த இரண்டு இரவுகளாக நடந்தவற்றை சொல்ல முற்பட்டேன். ஆனால் முடிக்க விடாமல் கிண்டல் செய்து கொண்டேயிருந்தான்.

“மச்சி… மல்லூ… physiotherpaist வேறங்கற… ராத்திரி முழுக்க massage தானா? நீ கலக்கு டா”

“டேய்… சொல்றத கேளுடா… matter serious…”

தடாலென்று ஒரு அடி. கீழே விழுந்தேன். நான் சுதாரிப்பதற்குள், என் கையில் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டு ஒரு யமஹா பறந்தது. அப்படியே மயங்கினேன்.

கண் விழித்தபோது பெரியம்மா விட்டில் இருந்தேன். பக்கத்தில் பெரியம்மா.

“என்ன சார், நன்னா தூங்கியாச்சா?” என்றாள். என்னை சார் என்று தான் அழைப்பாள் சின்ன வயதிலிருந்தே.

“பெரிம்மா…”

“பயப்படாத டா… ஒன்னும் இல்ல ஒனக்கு… லேசா அடி… ரெண்டு நாள் ஆஸ்பத்ரில தூங்காததுனால மயங்கிட்ட…”

“யாரு அடிச்சா?”

“மொபைல் திருடனுங்க தான்… சீஃப் மினிஸ்டர் இருக்கற எடம்னு பேர்தான்… ஆனா போன வாரம் மட்டும் 10 மொபைல் போயிருக்கு… இதே மாதிரி ரோட்ல பேசிண்டே இருக்கறச்சே பைக்ல வந்து கொண்டு போயிடறானுங்க… கடங்காரனுங்க”

“அம்மா?”

“ஆஸ்பத்திரிக்கு போயிருக்கா… இன்னிக்கே டிஸ்சார்ஜாம்… கொஞ்ச நேரத்துல அப்பாவையும் கூட்டிண்டு வந்துடுவா…”

“ஓ…”  சட்டென்று ஆண்ட்ரியாவைப்பற்றி ஞாபகம் வந்தது. “மணி என்ன பெரிம்மா? பத்து ஆச்சா?”

“இல்ல இப்போதான் 7 ஆறது…”

நான் கேட்டது காலை 10. அவள் சொன்னது மாலை 7.

“ஷிட்… சாரி…. பெரிம்மா, என் மொபைல் கெடச்சுதா?”

“இல்ல.. தூக்கிண்டு ஓடிட்டானுங்க… உன்ன உள்ள கொண்டு வருவோமா இல்ல அவனுங்க பின்னாடி ஓடுவோமா?”

“….”

“அம்மா சொன்னா 40 ஆயிரம் ஃபோனு அதுன்னு… என்ன பண்றது… உனக்கு ஒன்னும் ஆகலயேன்னு சந்தோஷப்பட்டுக்கு வேண்டியது தான்… பக்கத்து தெருல யாருக்கு காது அறுந்து போச்சாம்”

நான் ஃபோனுக்காக வருந்தவில்லை, அதில் இருந்த ஆண்ட்ரியாவின் நம்பருக்காக என்று எப்படி சொல்லுவது. சிறிது நேரத்தில் அப்பா-அம்மா-தம்பி எல்லோரும் வந்து விட்டார்கள்.

அடுத்த சில நாட்கள் என்னை வீட்டைவிட்டு வெளியே போக விட வில்லை. கார்த்திக்கின் நம்பரும் கிடைக்கவில்லை. பெரியம்மா வீட்டில் internet வசதியும் இல்லை. எனக்கு இதைப்பற்றி அவர்களிடம் பேச ரொம்ப பயமாக இருந்தது. என்ன நினைப்பார்கள் – இரண்டு நாள் ராத்திரி அப்பாவுடன் ரூமில் இல்லாமல் கூத்தடித்துவிட்டு இப்போது வேறு அவளை தேடிப்போகிறேன் என்று நினைப்பார்கள். எனக்கே பயமாக இருந்தது. அவள் சொன்னது எல்லாம் உண்மையா? என்னிடம் பொய் சொல்லி என்ன கிடைக்கும் அவளுக்கு? “பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் போல ஏதாவது இருந்தால்? ‘அவள் சொல்வது உண்மையாக இருந்திருந்தால்’  என்ற எண்ணமும் வந்தது. ஆனால் கோழையாக இருந்தேன்.

மூன்று நாட்கள் கழித்து வெளியே சென்று கார்திக்கிற்கு மெயில் செய்தேன். சென்னையில் இருக்கும் மற்றொரு நண்பனை என் வீட்டுக்கு வர வழைத்தேன். அவனுடன் வெளியே செல்வதாக சொல்லி மியாட் சென்றேன். அங்கே ஆண்ட்ரியாவின் நம்பரை வாங்கி முயற்சித்தேன் – ஆஃப் ஆகவே இருந்தது. ஆண்டனி நம்பர் கிடைக்கவில்லை. நேராக அவள் வீட்டுக்கே சென்று விடலாம் என்று நினைத்து அங்கே போனேன். ஆனால் பூட்டு தான் தொங்கியது. அக்கம்-பக்கத்தோருக்கு எதுவும் தெரியவில்லை. அவள் திருமணம் பற்றி கூட தெரியவில்லை. அது தெரிந்தால், கேரளா செல்லலாம் என்று பார்த்தேன்.

நொந்து போனேன். சில நாட்கள் கழித்து பெங்களூர் சென்று விட்டேன். பல நாட்கள் அவள் நம்பரை முயற்சி செய்து கொண்டேயிருந்தேன். அவ்வப்போது சென்னையில் இருக்கும் நண்பனைவிட்டு அவள் விட்டுக்கு சென்று பார்க்க சொல்வேன். இரண்டு மாதங்கள் கழித்து, அவர்கள் காலி செய்துவிட்டார்கள், வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொன்னான்.

‘10 மணிக்கு ஃபோன் செய்’ என்று சைகையில் சொன்ன அந்த பாவமான முகம் மட்டும் பல நாட்கள் கனவில் வரும். தாமஸ் உண்மையிலேயே திருந்தியிருக்க வேண்டும், அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். என் கோழைத்தனத்தை நினைத்து நொந்து கொள்வேன். கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறந்து போனேன் – அப்பாவுக்கு ஹெர்னியா இருப்பது தெரிய வந்தது வரை. அப்பா மியாட்டுக்கு தான் மறுபடி போக வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால், பழைய ஞாபகங்கள் அனைத்தும் வரும் மாதிரி ஆகி விட்டது. மியாட்டின் எந்த சுவற்றை பார்த்தாலும், அந்த இரண்டு இரவுகள் தான் ஞாபகம் வந்தன.

இப்போது: 11 ஜூன் மாலை.

அனைத்து ஃபார்மாலிடீஸும் முடிந்து discharge summary வாங்க reception ல் நின்று கொண்டிருந்தேன். தம்பி-அப்பா-அம்மா எல்லோரும் ரூமில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, நான் காலையில் பார்த்த அந்த இருவர் வெளியே ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்தார்கள் – அவர்கள், ஆண்டனியும், ஆண்ட்ரியாவும் தான். ஆண்ட்ரியா உண்டாகியிருந்தாள். கல்யாணம் ஆகியிருக்க வேண்டும். ஏனோ கிட்டே போய் பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அவள் நன்றாக இருக்கிறாள் என்ற விஷயமே போதுமானதாக இருந்தது. கிட்டே போனால், வேறு ஏதாவது தெரியவந்து விடுமோ என்ற பயமும் வந்தது. ஆண்டனி ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். இன்னும் பெருத்திருந்தான். பிஸினஸ் நன்றாக போகும் என்று நினைத்துக்கொண்டேன்.

அவள் என்னைப்பார்த்துவிட்டாள். மெலிதாக புன்னகை செய்தாள். அதில் சோகம் கலந்திருப்பதாக எனக்கு ஒரு பிரமை. ஒருவேளை அடிமை மாதிரி தான் நடத்துகிறானோ தாமஸ்! புருவம் உயர்த்தி எப்படி இருக்கிறாய் என்றாள். நான் தலையை ஆட்டி புன்னகைத்தேன் – அதில் நிஜமாலுமே குற்ற உணர்ச்சி ஒளிந்திருந்தது. அவள் வயிற்றைசுட்டிக்காட்டி கையை ‘take care’ என்பது போல உயர்த்தினேன். அதற்குள் அவர்கள் ஆட்டோ வந்துவிட்டது. எனக்கு கண்களாலேயே Bye சொல்லிவிட்டு ஏறிக்கொண்டேன்.

பேசிக்கொண்டே ஏறிய ஆண்டனி கீழே தவற விட்டான், என் பழைய மொபைலை.

27 April 2008

... ஷைலஜா ...

"லோ, சொல்லுண்ணா..."

"டேய் பிஸியா இருக்கியா?"

"இல்லண்ணா சொல்லு.."

சுதாகர் அண்ணா. என் பெரியம்மா மகன். அவன் வீட்டு கம்ப்யூட்டர் வேலை செய்யாவிட்டால் கண்டிப்பாக எனக்கு ஃபோன் செய்வான்.

"உங்க ஆஃபீஸ்ல ஷைலஜான்னு யாரானு பொண்ணு வேல பண்றாளா?"

"தெரியலண்ணா... மொத்தம் ரெண்டாயிரம் பேரு வேல பாக்கறோம் இங்க"

"அப்டியா? ஒரு நிமிஷம் இரு"

யாரோ ஏதோ சொல்கிறார்கள் அவனிடம். அதற்குள் நான் Exchange Server Directory ல் தேடினேன். யாரும் அந்த பெயரில் இல்லை.

"நன்னா டான்ஸ் ஆடுவாளாமாம் டா"

"ஓஹோ... ஆனா அந்த பேர்ல யாரும் இல்லண்ணா.. எந்த ஆஃபீஸன்னு ஒழுங்கா கேளு உன் friend கிட்ட... ஹாஹா"

"இல்லையா?" என் ஜோக் பிடிக்கவில்லை அவனுக்கு.

"ஆமாண்ணா... directory ல தேடியாச்சு"

"அது வீட்டு பேராம் டா... ஆஃபீஸ் பேரு வேற போல... ஆஃபீஸ் பேரு என்ன சார்?"

"அண்ணா, நக்கல் பண்றியா? directory ல வீ்ட்டு பேரு, Boy Friend கூப்படற செல்ல பேரு எல்லாம் இருக்காது... எதுக்கு அந்த பொண்ண தேடற இப்போ?"

"உனக்கு பாக்கத்தான் டா"

"எக்ஸ்க்யூஸ் மீ... என்ன நடக்குது இங்க... இப்போவே அம்மா கிட்ட பேசறேன்..."

"டேய் சும்மா பாருடா... மொபைல் டிவிஷன்லதான் இருக்காளாம்... உன் கோர்ஸ் முடிச்சிட்டு கல்யாணம் வச்சிக்கலாம்..."

"அண்ணா வம்பு பண்ணாத... சரி நான் அப்புறம் பேசறன்..." என்று உடனே கட் செய்தேன்.

இந்த relatives தொந்தரவு தாங்க முடியவில்லை இப்போதெல்லாம். 28 வயது ஆகிவிட்டதாம். அதனால் கல்யாணம் செய்ய வேண்டுமாம். என் career கனவுகள் என்ன ஆவது? நான் படிக்கும் weekend MS என்ன ஆவது? அம்மா இப்போதெல்லாம் direct ஆக pressure போடுவதில்லை. இப்படி யார் மூலமாகவாவது பேசவேண்டியது.

அன்று இரவு வீட்டுக்கு போய் பெரிய சண்டை போட்டேன். என்னை சமாதானம் செய்தாள் அம்மா. ரொம்ப நல்ல இடம். சுதாகர் அண்ணாவின் ஆஃபீஸில் ஷைலஜாவின் அப்பா வேலை பார்க்கிறாராம். எப்படியாவது எனக்கு முடித்துவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். நம் இஷ்டம் போல் கல்யாணம் செய்து கொடுப்பாறாம்.

நான் மசியவில்லை. நான் கோர்ஸ் முடிப்பது. அது வரை அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அன்று இரவு யார் அந்த ஷைலஜா என்று நான் நெடு நேரம் யோசித்தேன் என்பதை நான் இங்கே மறைக்க விரும்பவில்லை. அண்ணாவை ஆஃபீஸ் பெயரை சொல்லவிடாமல் தப்பு செய்துவிட்டோமே என்று வருத்தம் ஏற்பட்டது.
___________________________________________________

து நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. நானும் இதைப்பற்றி மறந்து விட்டிருந்தேன். ஒரு திங்கட்கிழமை. ஆஃபீஸில் பிஸியாக வேலை செய்துகொண்டிருந்தபோது "Please attend the BarCamp in IIM-B this weekend" என்று என் மேனேஜரிடமிருந்து mail. [Bar Camp - புதிதாக கம்பெனி துவங்குபவர்களின்
கூட்டம் - where entrepreneurs (& potentials) meet . Nothing to do with BAR] இருந்தது. அதற்கான registration செய்யும் வெப்சைட் வேலை செய்யாததால், என் நண்பன் ஸ்ரீதரை ஃபோனில் அழைத்தேன். அவன் தான் இம்முறை coordinate செய்கிறான்.

வெளிநாடு செல்லவிருப்பதால் அவன் வரவில்லையாம். ஆனால் எனக்கு சீட்டு போட்டுவிட்டதாக சொன்னான். அதைப்பற்றி பேசி முடித்தபின் திடீரென்று சொன்னான்.

"மச்சான்... நீ பயங்கர ஃபேமஸ் போல ஆஃபீஸ்ல?"

"நல்லாத்தான டா போய்க்கிட்டு இருந்தது. திடீர்னு ஏன் இந்த கொலை வெறி உனக்கு?"

"இல்லடா... கேள்விப்பட்டேன்... அதுவும் பொண்ணுங்க மத்தில ஊம் ஊம்...."

"என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே? matterஅ சொல்லுடா ஃபூல்"

"இல்லடா.. ஷைலஜான்னு எனக்கு தெரிஞ்ச பொண்ணு இருக்கா... உன் புகழ் பேச ஆரம்பிச்சா, நிறுத்தாம பேசறா அவ"

"ஓஹோ...! என்னது!! ஷைலஜா வா? அது வீட்ல கூப்படற பேரா இருக்குமே?"

"ஆமாடா... ஸ்கூல்ல எல்லாம் அவளுக்கு வேற பேருன்னு நினைக்கறேன்"

"அவங்க அப்பா கூட இந்தியன் பேங்க்ல வேல பாப்பாறே?"

"ஆஹா, கலக்கற டா... உனக்கு தெரியுமா அவள?"

"தெரியாது டா... அவளுக்கு official name என்னடா?"

"நக்கல் பண்ணாதடா.. இவ்ளோ விஷயம் தெரியும்... ஆனா பேரு தெரியாதா?"

"அது வேற matter டா... சரி விடு... அப்புறம் என்ன news சொல்லு"

"ஒன்னும் இல்லை டா... மேற்கே நோக்கி பயணம் செய்யப்போறேன்... அங்க இருக்கற VC எவனாவது சிக்குவானான்னு பாத்து... அடுத்த Monday தான் வருவேன்"

"All the best டா... எப்படியாது funding வாங்கிடு... அப்புறம் என்ன உன் கம்பெனில CEO வா சேத்துக்கோ"

"உருப்பட்ட மாதிரி தான்... சரி, உன் கல்யாணம் எப்போ?"

"அய்யோ வீட்ல torture தாங்கல டா... கோர்ஸ் முடியட்டும்னா கேக்கமாட்டேங்கறாங்க"

"அதே கததான் இங்கயும்... ஆனா என் விஷயத்துல, மாப்ள கம்பெனி ஆரம்பிக்கறாருக்கு சொன்ன உடனே, பொண்ணோட அப்பா எல்லாம் ஓடிடுவாங்க.. so எனக்கு கவல இல்ல... அவங்களுக்கு உன்ன மாதிரி SHIT தான் வேணும்"

"SHIT ஆ?"

"Single, High Income, Techie டா"

"ஹாஹாஹா.... சரி டா மாப்ள... நீ ஊருக்கு நல்லபடியா போய்ட்டு வா... அப்புறம் பேசுவோம்...."
________________________________________________________

துற்குமேல் எனக்கு பொறுக்கவில்லை. யார் அந்த ஷைலஜா என்று பரபரத்தேன். அவள் அப்பாவோ எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். இவளோ என்னைப்பற்றி புகழ் பாடுகிறாளாம். ஆனால் ஆஃபீஸில் அவளுக்கு என்ன பெயர் என்று எப்படி கண்டுபிடிப்பது? சுதாகர் அண்ணாவை கேட்கலாம். ஆனால் அவன் அம்மாவிடம் போட்டுகொடுத்துவிடுவான். ஸ்ரீதரை இதைக்கேட்டு mail செய்தால் ரொம்ப கோபப்படுவான். அவன் பிஸியாக இருப்பான்.

என் மேனேஜர் வந்தார் "Venky, I hope the report on 'Long Term Evolution' techonology will be ready tonight"

"Yeah Sure"

அவர் சென்றபின், "ஐயா, இங்க என்னோட long term plan பண்ணனும் நான்... dont disturb me" என்று நினைத்துக்கொண்டேன்.

Employee Directory யை மொத்தமாக MS Excel க்கு Export செய்தேன். ஒவ்வொரு பேராக பார்த்து கண்டுபிடிக்கலாம் என்று திட்டம். முதல் கட்டமாக ஆம்பிளை பெயர்களை பிரித்தேன். அதிலும் Prasanna, Soujanya, Saswata என்று ஆம்பிள்ளையா பொம்பளையா என்று கண்டுபிடிக்க முடியாத பெயர்கள் வேறு.

அதிலேயே 2 மணி நேரம் போனது. பின்னே, 2137 பெயர்களை படிக்க வேண்டாமா? அடுத்த கட்டமாக, வட நாட்டு பெயர்களை களைந்தேன். Sheetal களும், Sapna க்களும் போயின. கூடவே இன்னும் இரண்டு மணி நேரமும்.

அடுத்த கட்டம் வருவதற்குள், "Venky, what are you doing yaar.. Is the report done?"

"Well, actually.. the long term... evolution.. and technology of the... compared to 3G..." என்று உளறினேன்.

"You look very tired... Do it tomorrow, go home now.. Take care, you seem to be exerting too much" என்றார்.

"நன்றி ஐயா" என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

இன்னும் 363 பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. வீட்டுக்கு போகும்போது அதே நினைவு தான். திடீரென்று உரைத்தது. சுதாகர் அண்ணா அவள் மொபைல் டிவிஷனிலேயே இருப்பதாக அன்று சொன்னானே. சே, அதில் மட்டும் தேடியிருந்தால், இந்நேரம் முடித்திருக்கலாம் என்று நொந்துகொண்டே போனேன்.

"என்னடா ரொம்ப வேலையா? கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கோடா" என்றாள் அம்மா. "நீ பேர கேட்டு சொல்றியா" என்று அவளுக்கு கேட்காதவாறு சொல்லிவிட்டு அந்த weekend class க்கான assignment செய்ய போனேன். ஆனால் assignment எங்கே செய்ய முடிந்தது. அந்த பெயர் தெரியாத முகம் தெரியாத பெண்ணின் முகம், sorry, ஞாபகம் தான் நினைவில் இருந்தது.
__________________________________________________________

டுத்த சில நாட்கள் ஆஃபீஸில் அந்த XL sheet ஐ திறக்கமுடியவில்லை. பயங்கர வேலை. பயம் வேறு. அதைத்திறந்து analyze பண்ண ஆரம்பித்தால் நாளெல்லாம் அதிலேயே போய்விடும். Long Term Evolution எல்லாம் கோவிந்தா தான்.

ஆனால் எங்கே பெண்கள் இருந்தாலும் வெறித்து வெறித்து பார்க்க ஆரம்பித்தேன். "டேய், Brigade Road ல பண்ற மாதிரி ஆஃபீஸ்லயே பண்ற டா இப்போல்லாம்... கொஞ்சம் அடக்கி வாசி... அசிங்கமா இருக்கு... பேசாம கல்யாணம் பண்ணிக்கோயேன்..." என்று நண்பர்கள் advice வேறு. எல்லாம் நேரக்கொடுமை. என் கஷ்டம் அவர்களுக்கு என்ன தெரியும்.

ஒரு நாள் Tech Sensing Report ஐ திறந்து வைத்துக்கொண்டு, அவளைப்பற்றியே
யொசித்துக்கொண்டிருந்தேன். லிஃப்ட்டில் பார்த்த பெண், lunch buffet யில் எனக்கு முன்னே சென்ற பெண், காஃபி மஷின் அருகே என்னைப்பார்த்து hi சொன்ன பெண் எல்லோரும் நினைவுக்கு வந்து போனார்கள்.

அனைவருக்குமே Tam-Bram களை இருந்ததோ? அந்த லிஃப்ட் பெண் வட நாட்டுக்காரி என்றே நினைக்கிறேன். அந்த காஃபி மஷின் பெண் ரொம்ப அழகாக இருந்தாள். அவளாக இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

சே, இந்த பெண்களால் எவ்வளவு கஷ்டம். அவள் பாட்டுக்கு வேலை செய்துகொண்டிருப்பாள். நான் இங்கே லூசு மாதிரி யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். ஸ்ரீதரிடம் போய் புகழ் பாடுகிறாள். என்னிடம் வந்து
பேசினால் என்ன? வந்து பேசக்கூட கோர்ஸ் முடியும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன? நான் தான் கொஞ்சம் ஓவராக பண்ணிவிட்டேனோ? அம்மாவிடம் அன்று அவ்வளவு strict ஆக பேசியிருக்கக்கூடாது. பேசாமல் engagement முடித்திருந்தால் இப்போது பிரச்சினை இல்லை. இப்போது யாரென்றே தெரியாமல் அவதிப்படுகிறேன்.

"What Venky... why are you not picking up the phone yaar?"

"Oh.. sorry Deepak... " என்றபடியே மொபைலைப்பார்த்தால், 5 மிஸ்டு கால்கள்.

"Not to worry... I wanted some info.. But I got it myself... By the way, what is happening with you? Always seem to be in some kind of dreams... Got engaged or something?"

"No.. No.. Deepak"

"I guess you need a break... Go to a disco and get all your stress busted today" என்று சொல்லி சென்றுவிட்டார்.

சட்டென்று அண்ணா சொன்னது நினைவுக்கு வந்தது - அவள் நன்றாக dance ஆடுவாளாமே! நேராக லைப்ரரிக்கு ஓடினேன். ஒரு மாதம் முன்பு நடந்த கம்பெனி விழாவின் DVD இருக்கும் அங்கே. அதில் கண்டிப்பாக அவள் ஆடியிருக்க வேண்டும்! டான்சரான என் நண்பன் காந்தியிடம் கேட்கலாம், ஆனால், அவன் ஆயிரம் கேள்விகள் கேட்பான். DVD பார்த்து மூன்று மணி நேரம் செலவானதுதான் மிச்சம். அதில் ஆடியிருந்த பெண்களில் முன் வரிசையில் யாருமே தமிழ் போல் இல்லை. அனைவரும் அறைகுறை ஆடையில் வேறு இருந்தார்கள். பின் வரிசை பெண்கள் முகங்களெல்லாம் சரியாகவே தெரியவில்லை.

என்ன நடக்கிறது இங்கே? நன்றாகத்தானே இருந்தேன். ஏன் இப்படி ஒரு பெண்ணுக்காக இப்படி ஆகிவிட்டேன்? இது வெறும் curiosity யா இல்லை உண்மையிலேயே கல்யாண ஆசை வந்து விட்டதா? தினம் தினம் தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன். வேலையில் ஏதோ கவலை என்று அப்பா-அம்மா நினைத்தார்கள். உண்மையை அவர்களிடம் சொல்ல என் Ego வும் இடம் கொடுக்கவில்லை.

அப்படியே சனிக்கிழமை வந்துவிட்டது. Bar Camp உம் முடிந்தது. அதிலும் சுரத்தில்லமலேயே இருந்தேன். ஆனால் ரொம்ப களைத்துப்போயிருந்ததால் நன்றாக தூக்கம் வந்தது.
______________________________________________________________

சி வாரங்கள் கழித்து!

"அவ்ளோ கஷ்டப்பட்டீங்களா என் பேர கண்டுபிடிக்க..." என்றாள் ஒரு வித பெருமையுடன் - என் அழகான fiancee.

"ஆமாம்மா... ஒரு வாரம் torture தான்... ஆனா இப்டி ஒரு அழகிக்காக எவ்ளோ நாள் வேணா கத்திருக்கலாம்" என்று அவளை இன்னும் பெருமைப்படுத்தினேன்.

"இது ரொம்ப ஓவர்தான்"

"அதெல்லாம் ரொம்ப சீரியஸா எடுத்துக்காத.... சரி வா, வீட்டுக்கு போகலாம்"

"சீசீ... உங்க அப்பா அம்மா அப்புறம் என்ன நினைப்பாங்க?"

"அதெல்லாம் பாத்துக்கலாம் வா.... நான் கோர்ஸ் முடியற முன்னாடியே கல்யாணத்துக்கு OK சொன்னா அவங்களுக்கு சந்தோஷம்தான்"

"அப்போ போய் first சம்மதம் சொல்லுங்க... நான் எங்க அப்பாகிட்ட சொல்லி பேச சொல்றேன்... அப்புறம் நான் வீட்டுக்கு வர்ற business எல்லாம் வச்சிக்கலாம்."

"அதுவும் சரி தான், இரு உனக்கு ஆட்டோ பாக்கறேன்..."

"ஆஹா... இந்த hi tech world லயும் தமிழ் பொண்ணுங்க எவ்ளோ importance குடுக்கறாங்கப்பா பெரியவங்களுக்கு." என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படியே ஆட்டோ பிடிக்கும் முன் ஒரு பொக்கே வாங்கி அவளுக்கு கொடுக்க, அவள் அப்படியே வெட்கப்பட,

"டேய்... இந்த சட்ட தோய்க்கனுமா வேண்டாமா" என்று அப்பா கத்தினார்.

சீ, எல்லாம் கனவா!! அடடா, கனவுலயாவது ஆஃபீஸ் பேர கேட்ருக்கலாமே.... அது சரி, இப்பல்லாம், கனவுல கூட "சில வாரங்கள் கழித்து" னு வருது. என்ன கொடும சரவணன் இது, என்று நினைத்துக்கொண்டேன்.
_______________________________________________________________

டுத்த திங்கள், இந்த லூசுத்தனமான லவ்வில் சிக்கி ஒரு வாரம் ஆகிவிட்டிருந்தது. நான் ஆபீஸுக்கு கிளம்புகையில், "இந்த விஸ்வனாதன் மெயில் பண்ணிருக்காரு பாரு" என்றார் அப்பா, என் அம்மாவிடம்.

"யாரு விஸ்வனாதன்?"

"யாரா? அவர்தான்டா.. சுதாகரோட வேல பாக்கறவர். போன வாரம் சொன்னேனே.."

"ஓ.."

"சரி, நீ கிளம்பு... சித்த இருங்கோ... இவன அனுப்பிட்டு வந்துடறேன்..."

அது சரி, என்ன இப்டி டீல்ல உட்டுட்டு சம்பந்தி ரெண்டு பேரும் மெயில் பண்ணிக்கறீங்களா என்று நினைத்துக்கொண்டே அவசரமாக கிளம்பினேன்.

புதிதாக துப்பு கிடைத்துள்ளதே! அப்பா பெயர் விஸ்வநாதன். அந்த 363 பேர்களில், யாருக்கு விஸ்வநாதன் என்று Last Name இருக்கிறதோ, அல்லது V
என்ற initial இருக்கிறதோ, அவள் தான். Hopefully, அது போல் பல பேர் இருக்கக்கூடாது. 4-5 பேர் இருந்தால், அப்புறம் ஈஸி.

நான் நினைத்தது போலவே நடந்தது. 2 பேர் தான் இருந்தார்கள். Pradeepa Viswanathan மற்றும் Kalpana Viswanathan. 'V' initial கொண்டு யாரும் இல்லை. இனி ஈஸி. Kalpana Viswanathan seat எங்கே என்று தேடியதில், என் floorஇலேயே இருந்தாள். போய் பார்த்தால், கல்யாணமான ஆண்ட்டி. அப்படியென்றால்,
Pradeepa தான். சஹி ஹை. Gotcha என்று என்னையே மெச்சிக்கொண்டேன்.

Pradeepa வேறு floor ல் அமர்ந்திருக்கிறாள். அங்கே ஓடினேன். ஆனால் அவள் சீட்டில் இல்லை. இந்த கேம் எப்போதுதான் முடியுமோ தெரியவில்லையே என்று பொறுமிக்கொண்டே Monday morning meeting க்கு சென்றேன்.

அது முடியும் தருவாயில், ஸ்ரீதர் ஃபோன் செய்தான்.

"டேய் மச்சான், வந்துட்டியா?"

"ஆமாடா... நேத்தே வந்தாச்சு..."

"Good, எனவா மாட்டுனானா VC பய?"

"இல்லடா... இன்னும் கொஞ்ச நாளைக்கு angel investor அ வச்சிக்கிட்டு தான் ஓட்டனும்"

"ஹ்ம்... கவல படாதடா... சீக்கிரம் எவனாவது impress ஆவான்... உன் business model ரொம்ப புதுசு... அதான் தயங்கறாங்க... Once they come, there will be no stopping"

"OK.. OK... நான் ஒன்னும் அவ்ளோ desparate ஆ எல்லாம் இல்ல, இப்போதைக்கு angel investor போதும்"

"Good, மச்சான், சாயங்காலம் வர்றியா? நான் கூட ஒரு angel பத்தி பேசணும் உன் கிட்ட"

"உன் office ல தான் டா இருக்கேன் இப்ப... lunch க்கு வர்றியான்னு கேட்க தான் கூப்டேன். நம்ம கூட ஒரு angel உம் வர்றா"

எனக்கு ஜிவ்வென்றிருந்தது.

"என்னடா சொல்ற?"

"நீ food court க்கு வா... பேசுவோம்"

அதற்குள் மீட்டிங் முடிந்திருந்தது. ஓடினேன் food court ஐ நோக்கி.
_________________________________________________________________

ஸ்ரீதருடன் ரொம்ப நெருக்கமாக ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இது யாரோ தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டே சென்றேன்.

"வாடா வெங்கி.... This is Shylaja.... Shylu, of course you know this is Venky"

ஷைலூவா? என்ன நடக்குது இங்க? வாயடைத்து நின்றேன்.

"என்னடா பக்கற அப்டி... போன வாரம் சொன்னேனே... நீ கூட ஆஃபீஸ் பேரு கேட்டியே... ஷைலு, உன் official name என்ன?"

"Pradeepa Viswanathan?" என்றேன் ஒரு வித கோபத்துடன்.

"அமா, நீங்களே கண்டுபுடிச்சுட்டீங்களா?"

"உட்காருடா... உனக்கும் சேத்து North Meals சொல்லிட்டேன்... OK தானே?"

"OK" என்று முறைத்தேன்.

"ஏன் டா ஒரு மாதிரி இருக்கே? By the way, I have got engaged to ஷைலு"

"போன வாரமே ஏண்டா சொல்லல?"

"இல்லடா... அப்போ முடிவு பண்ணல... we were still just talking to each other... நேத்துதான் முடிவு ஆச்சு... அதுக்குள்ள சொல்ல வேண்டாம்னுதான் சொல்லல"

" "

"You know what... இந்த newsஅ, apart from our immediate family, உனக்கு தான் first சொல்றோம்"

"ரொம்ப சந்தோஷம்"

"அப்புறம் வெங்கி... I am so happy to have met you today... நம்ம கம்பனி magazine ல நீங்க எழுதற column எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்க Blog கூட நிறைய படிப்பேன்.."

"அதவிட ரொம்ப சந்தோஷம்"

"என்ன டா வெங்கி... இவ்ளோ dejected ஆ இருக்க? நீயும் பேசாம ஒரு கல்யாணம் பண்ணிக்கோ டா"

"அடப்பாவி... நான் பாட்டுக்கு என் வேல உண்டு, கோர்ஸ் உண்டுன்னு இருந்தேனேடா....போன வாரம் ஃபோன்ல அனாவசியமா பாதிப்பாதி விஷயத்த பேசி கொழப்பிட்டியேடா.... இவ அப்பன் வேற... எனக்காகவே வெயிட் பண்ணுவாராமே.... இப்போ என்ன ஆச்சு?" என்றெல்லாம் சொல்ல முடியாமல் சாப்பிட்டு விட்டு வந்தேன். ஆனால் இந்தப்பெண் ஒன்றும் அந்த காஃபி மஷின் பெண் போல அழகாக இல்லை என்று நினைத்து மனதை தேற்றிக்கொண்டேன்.
_________________________________________________________________

சீட்டுக்கு வந்தேன். ஸ்ரீதர் மேல் கோபம் கோபமாக வந்தது. சற்று நேரம் மானிட்டரையே பார்த்தேன்.

பாத்ரூமில் போய் அரை மணி உர்கார்ந்தேன். காஃபி ஷாப்பில் போய் இன்னும் அரை மணி நேரம் இருந்தேன். கோபம் அடங்கவேயில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக அம்மாவுக்கு ஃபோன் செய்தேன்.

"என்னடா இந்த நேரத்துல?"

"அம்மா"

"என்னடா போர் அடிக்குதா? சரி நான் நியூஸ் சொல்றேன், சுதாகர் பாத்து சொன்னானே, அந்த பொண்ணுக்கு நிச்சயம் ஆயிடுத்தாம்.... அவா அப்பா மெயில் பண்ணியிருதார் கார்த்தால... நல்ல குடும்பம். நமக்குதான் குடுத்து வெக்கல... அவாளும் பாவம் எத்தன நாள்தான் வெயிட் பண்ணுவா?"

"அம்மா..."

"சொல்லுடா"

"அம்மா..."

"சொல்லு.."

"அம்மா..."

"என்னடா... அம்மா அம்மான்னா என்ன பண்றது? ஆஃபீஸ்ல தானே இருக்கே?"

"அம்மா..."

"டேய், எனக்கு பயமா இருக்கு டா... என்ன ஆச்சு உனக்கு?"

"அம்மா.... நான் கல்யாணம் பண்ணிக்கறேம்மா.... எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிம்மா..."